![]() COMMUNICATION(S) POINT as your Homepage
"அண்மை செய்திகள்,31/07/2010,காலை,IST- 05.30 மணி,நிலவரப்படி, விலைவாசி உயர்வு பிரச்சினை: பாராளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது; எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதால் வேறு அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. மறுநாள் (செவ்வாய்க் கிழமை) பாராளுமன்றம் கூடியதும் பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து சபையில் விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானத்துக்காக நோட்டீசு கொடுத்தனர். ஆனால் சபாநாயகர் மீராகுமார் இதை ஏற்கவில்லை. விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து விவாதிக்கலாம். ஆனால் ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க இயலாது. அதற்கான சூழ்நிலை இப்போது எழவில்லை என்று கூறினார். இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை போலவே மாநிலங்களவையிலும் இதே பிரச்சினை எதிரொலித்தது. இதனால் பாராளுமன்றத்தை நடத்த முடியாமல் இருசபை களும் ஒத்தி வைக்கப்பட்டன. புதன், வியாழக்கிழமை களிலும் இதே நிலைதான் நீடித்தது. இன்று 4-வது நாளாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் இன்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடுமையான கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து 4-வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது. சபையை நடத்த முடியாததால் மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார். முன்னதாக அவர் கேள்வி நேரத்தை நடத்த ஒத்துழைக்கும்படி எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் அதை ஏற்கவில்லை. விலைவாசி உயர்வு பிரச்சினைதான் தற்போது முக்கிய பிரச்சினையாக உள்ளது. எனவே அதை விவாதித்த பிறகே வேறு பிரச்சினைக்கு செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் திட்டவட்டமாக கூறி விட்டனர். பாராளுமன்றம் 4-வது நாளாக முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் எதிர்க்கட்சியினர் நடந்து கொள்வதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள். இதற்கிடையே எதிர்க் கட்சிகளின் பிடிவாதமான தொடர் அமளியை முடிவுக்கு கொண்டு வர அனைத்துக்கட்சி தலைவர்களிடம் சபாநாயகர் மீராகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், விலைவாசி உயர்வு பிரச்சினை மிகவும் முக்கியமானது. பொதுமக்களும் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே ஒரு சுமூக முடிவு எடுக்க பேசி வருகிறோம் என்றார். ![]() மின்கட்டண உயர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது : நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டணம் அமல் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ள மனு மீதான கருத்துக் கேட்பை தொடர்ந்து, புதிய மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. புதிய மின் கட்டண ஆணையில், கட்டண உயர்வு தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த கட்டண உயர்வு, நாளை (1ம் தேதி) முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு கோடியே 38 லட்சம் பேர், வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2003 மார்ச் மாதம் 15ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பலமுறை பரிசீலனை செய்தாலும், இது ஓட்டுக்கு வேட்டு வைக்கும் விவகாரம் என்பதால் அதை தள்ளிப் போட்டு வந்தது. நாடு முழுவதும் மின்தட்டுப் பாடு அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறையை சரிசெய்ய, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைக்கு மின் வாரியம் தள்ளப் பட்டது. இதனால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் அதிகமானது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதியன்று, மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான மனுவை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்வாரியம் விண்ணப்பித்தது. இதில், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து நான்கு ரூபாயாக உயர்த்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கான உயர் மின் அழுத்த இணைப்பு பெற்றவர்களுக்கு, ரூ.3.50லிருந்து, ரூ.4.20 ஆகவும், உயர் அழுத்த இணைப்பு பெற்றுள்ள வணிக நிறுவனங்களுக்கு, ஐந்து ரூபாயில் இருந்து, ரூ. 5.80 ஆக உயர்த்த மனு செய்யப்பட்டுள்ளது. வீட்டு இணைப்புகளைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து 4 ரூபாயாகவும், 401 முதல் 600 யூனிட் வரை உபயோகிப்போருக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து 4.25 ஆகவும், 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ. 4.75லிருந்து, 5.75 ஆகவும் உயர்த்த அனுமதி கோரியுள்ளது. இது தவிர தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள கல்லூரி, சினிமா தியேட்டர்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவகையான இனங்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்குமாறு மின்வாரியம் மனுவில் கோரியிருந்தது. இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பொதுமக்கள் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியை நடத்தியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங் களில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், தொழில் அமைப்புகளும், பொதுமக்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், புதிய மின்கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் கபிலன் மற்றும் உறுப்பினர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மின்கட்டண உயர்வு குறித்து அறிவிக்கவுள்ளனர். கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தும் மின்வாரியத்தின் அறிவிப்பு தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஆஜரான பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் கருத்துகளை பரிசீலித்துள்ள ஆணையம், அதற்கேற்ப, மின்வாரியத்தின் வேண்டுகோளில் சிலமாற்றங்களைச் செய்து, இன்று அறிவிக்கவுள்ளது. வீடுகளுக்கான மின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வீட்டு இணைப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கான இணைப்பு பெற்றுள்ள பெரும்பாலானவர்களுக்கு கட்டண உயர்வு பொருந்தும் எனக் கூறப்படுகிறது. ![]() தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் வேலை நிறுத்தம் சுங்க வரி ரத்து, டீசல் விலையை குறைக்கக்கோரி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால், தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் 221/2 லட்சம் லாரிகள் ஓடாது. தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் தரை வழி போக்குவரத்து கூட்டமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமை தாங்கினார். கூட்டத்தில், தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சுகுமார், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், வேன் உரிமையாளர்கள் சங்க தலைவர் துரை, மினி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கணேஷ் பங்கேரா, புதுச்சேரி மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1997-ம் ஆண்டு மத்திய அரசு லாரி உரிமையாளர்களுடன் கலந்து பேசி சுங்க வரி தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, வாகனங்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டு, சுங்க வரி வசூல் செய்யப்பட்டது. கிலோ மீட்டருக்கு ரூ.1.45 என்று இருந்த சுங்க வரி கடந்த 2008-ம் ஆண்டு மந்திரிகள் குழு கூட்டத்தில் ரூ.3.45 என்று மாற்றி அமைக்கப்பட்டது. வாகனங்களும் 6 வகையாக பிரிக்கப்பட்டன. இதனால், லாரி உரிமையாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது. தற்போது, ஜி.எம்.ஆர்., எல்.என்.டி., ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் சுங்கம் வசூலிக்கின்றனர். இந்த நிறுவனங்கள் வலியுறுத்தலின் பேரில் சுங்க கட்டணத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ரூ.170 ஆக இருந்த சுங்க கட்டணம் தற்போது ரூ.330 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மதுரவாயலில் இருந்து தாம்பரம் வரை 17 கிலோ மீட்டர் தூரம் உள்ள பைபாஸ் சாலையில் ரூ.325 சுங்க வரி வசூலிக்கின்றனர். எனவே, மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, கிலோ மீட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும். தற்போது, வாகனப் போக்குவரத்து 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அதை கருத்தில் கொண்டு விகிதாச்சார அடிப்படையில் சுங்க வரியை குறைக்க வேண்டும். மேலும், டீசல் மீதான விற்பனை வரியை மாநில அரசு வாபஸ் பெற வேண்டும். டயர் மீதான வரி உயர்வையும் குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களில் லாரிகள் ஓடாது. இந்த வேலை நிறுத்தத்தில் 221/2 லட்சம் லாரிகள் ஈடுபடுகின்றன. இதனால், அரசுக்கு தினமும் ரூ.1000 கோடி இழப்பு ஏற்படும். 50 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். 4 நாட்களுக்குள் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்காவிட்டால், 6-ந் தேதி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். சேலத்தில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக லாரி அதிபர்கள் மற்றும் லாரி தொழில் சார்ந்த தொழில் சங்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் உள்ள தனியார் சுங்கச்சாவடிகளில் 70 சதவீதம் அளவுக்கு, தென் மாநிலங்களில்தான் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 60 சதவீதம் அளவுக்கு தமிழ்நாட்டில்தான் உள்ளன. எனவே தமிழகத்தில் இயங்கும் லாரிகளுக்கும், தமிழகம் வழியாக செல்லும் லாரிகளுக்கும் பாதிப்பு மிகவும் அதிகம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி அதிபர்கள் பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம். எந்த பலனும் இல்லை. எனவே நாளை முதல் தென் மாநில அளவில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு லாரிகள் போக்குவரத்து நேற்றுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் தமிழகம் உள்பட தென் மாநிலங்களுக்கு சரக்குகள் அனுப்புவதற்கான பதிவு இன்று முதல் நிறுத்தப்படுகிறது. எங்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், உணவு எண்ணெய் (எடிபில் ஆயில்) ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் சங்கம், எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம், சேலம் மாவட்ட மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கம், சுமை தூக்குவோர் சங்கத்தினர் போன்ற லாரி தொழில் சம்பந்தப்பட்ட பிற தொழில் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக முதலில் காய்கறிகள் போக்குவரத்து பாதிக்கப்படும், அதன் பிறகு பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்தும், எல்.பி.ஜி. சமையல் கியாஸ் வினியோகமும் பாதிக்கப்படும். மேலும் லாரி சார்ந்த அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும். மொத்தத்தில் இந்த 4 நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமான இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. அதேபோல் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்கு போக்குவரத்து முடங்கிவிடும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இன்றைய செய்திப் புகைப்படங்கள் (31/07/2010) தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி ஆந்திர சட்டசபை இடைத் தேர்தலில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, 11 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. காங்., மாநில தலைவர் ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். ஆந்திராவில் கடந்தாண்டு தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்து, போராட்டம் வெடித்தது. சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) தலைவர் சந்திரசேகர ராவ், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களில் பத்து பேர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் பா.ஜ.,வைச் சேர்ந்தவர். மற்றொருவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். இந்த 12 தொகுதிகளுக்கும் கடந்த 27ல் இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஐந்து தொகுதிகளுக்கு மட்டும் ஓட்டுச் சீட்டு முறை பின்பற்றப்பட்டது. மற்ற தொகுதிகளில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடந்தது. இந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ்., சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. தேர்தல் நடந்த 12 தொகுதிகளில் 11 தொகுதிகளில் டி.ஆர்.எஸ்., ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்தது. நிஜாமாபாத் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் லஷ்மி நாராயணா முன்னணியில் இருந்தார். மன்செரியால் தொகுதியில் டி.ஆர். எஸ்., வேட்பாளர் 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில், தெலுங்கு தேசம் வேட்பாளரை தோற்கடித்தார். சென்னூர், சிர்புர், வெமுலுவாடா தொகுதிகளிலும் டி.ஆர்.எஸ்., வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். சித்திபேட் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவின் மருமகன் ஹரீஸ் ராவ், 90 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில், தன்னை அடுத்து வந்த தெலுங்கு தேசம் வேட்பாளரை தோற்கடித்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர். தர்மாபுரி தொகுதியில் டி.ஆர்.எஸ்., வேட்பாளர் ஈஸ்வர் வெற்றி பெற்றார். காங்., தலைவர் தோல்வி: நிஜாமாபாத் தொகுதியில் கடந்த முறை எம்.எல். ஏ.,வாக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த லட்சுமி நாராயணா, மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் ஆந்திர மாநில தலைவர் ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆந்திர மாநில அரசியலில் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸ், கடந்த தேர்தலிலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிப்பதற்கு முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் இணைந்து, தீவிர தேர்தல் பணியாற்றிவர் ஸ்ரீநிவாஸ். இவரது தோல்வி, காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக, தேர்தல் நடந்த 12 தொகுதிகளில் 11ல் டி.ஆர்.எஸ்.,சும், ஒரு தொகுதியில் பா.ஜ.,வும் வெற்றி பெற்றன. இதன்மூலம், தெலுங்கானா பகுதி தனது கோட்டை என, சந்திரசேகர ராவ் மீண்டும் நிரூபித்துள்ளார். ஆட்சி கையில் இருந்தாலும், ஆளும் கட்சியான காங்கிரசால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதேபோல், பாப்லி அணை விவகாரத்தில் தடாலடி போராட்டம் நடத்தி, மகாராஷ்டிராவில் கைதாகி பரபரப்பை ஏற்படுத்திய சந்திரபாபு நாயுடுவின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அவரது தெலுங்கு தேசம் கட்சியும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு: தேர்தல் முடிவு குறித்து காங்., மூத்த தலைவரும், ஆந்திர முதல்வருமான ரோசய்யா கூறுகையில்,"மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்'என்றார். கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், "தெலுங்கானாவுக்கு ஆதரவாக மக்களின் உணர்வு தீவிரமாக இருப்பதால், எங்களால் வெற்றி பெற முடியவில்லை' என்றார். தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் வெற்றி, எதிர்பார்த்தது தான்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது. ![]() தேர்தல் கமிஷன் நடவடிக்கை: ம.தி.மு.க.வின் மாநில கட்சி அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் வாபஸ் பெற்றுள்ளது. புதுச்சேரியில், பா.ம.க. தனது அங்கீகாரத்தை இழந்தது. இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா, தேர்தல் கமிஷனர்கள் எஸ்.ஒய்.குரேஷி, வி.எஸ்.சம்பத் ஆகியோர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டில், ம.தி.மு.க., அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆகும். அதற்கு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) ஆணையின்படி, `பம்பரம்' சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்தல் சின்னங்கள் ஆணையின் 6ஏ மற்றும் 6சி விதிகளின் படியே, ஒரு கட்சியின் அங்கீகாரம் நீடிப்பது முடிவு செய்யப்படுகிறது. கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர்கள், செல்லத்தக்க மொத்த ஓட்டுகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெறுவதுடன், 2 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடைசியாக நடந்த பாராளுமன்ற தேர்தலில், செல்லத்தக்க மொத்த ஓட்டுகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெறுவதுடன், ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, சட்டசபை தேர்தலில், மொத்த தொகுதிகளில் 3 சதவீத தொகுதிகளிலோ அல்லது 3 தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, பாராளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி வீதம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறைப்படி, ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும், ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டுகள், தேர்தல் கமிஷனால் ஆய்வு செய்யப்படுகின்றன. அதன்படி, ம.தி.மு.க. பெற்ற ஓட்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. அக்கட்சி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் 3.67 சதவீத ஓட்டுகள் பெற்றதுடன், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலில் 5.98 சதவீத ஓட்டுகள் பெற்றதுடன், 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், அக்கட்சி, தனது அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை. எனவே, ம.தி.மு.க.வின் அங்கீகாரத்தை ஏன் வாபஸ் பெறக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளித்தது. அதற்கு அக்கட்சி எழுத்து மூலம் அளித்த பதிலில், சட்டசபை தேர்தலில் பெற்ற 5.98 சதவீத ஓட்டுகளை 6 சதவீதமாக `ரவுண்ட்' செய்து, அங்கீகாரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. மேலும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளித்தது. அவரும், அக்கட்சி ஏற்கனவே அளித்த வாதங்களை முன்வைத்தார். ஆனால், அவை ஏற்புக்குரியதாக இல்லை. எனவே, ம.தி.மு.க.வின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், அக்கட்சி பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சியாக நீடிக்கும். அதற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட `பம்பரம்' சின்னம், 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். பா.ம.க., தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி ஆகும். அக்கட்சிக்கு "மாம்பழம்" சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 34.29 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது. எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 3.80 சதவீத ஓட்டுகள் பெற்று, 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, புதுச்சேரியில் அக்கட்சி மாநில கட்சியாக நீடிப்பதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை. எனவே, புதுச்சேரி மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க பா.ம.க.வுக்கு வாய்ப்பு தரப்பட்டது. அதன்படி, எழுத்து மூலம் விளக்கம் அளித்தது. பிறகு, கடந்த 19-ந் தேதி, பா.ம.க.வை சேர்ந்த ஆர்.வேலு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், இரண்டாம் இடத்தை பெற்றதாகவும், சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் அவர் எடுத்துரைத்தார். புதுச்சேரியில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி இருப்பதால், `ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற வேண்டும்' என்ற தேர்தல் சின்ன ஆணை, அங்கு பொருந்தாது என்றும் அவர் கூறினார். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் தேர்தல் சின்ன ஆணை விதிமுறைகளை பா.ம.க. பூர்த்தி செய்யவில்லை. ஆகவே, புதுச்சேரியில் பா.ம.க.வின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், அக்கட்சி `மாம்பழம்' சின்னத்தை பயன்படுத்தி கொள்ளலாம். தமிழ்நாட்டில், பா.ம.க. வழக்கம் போல் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக நீடிக்கும். லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதளம், பீகார், ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில், தேசிய கட்சி அங்கீகாரம் பெற்றிருந்தது. ஆனால், கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், பீகார், ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் அக்கட்சி பெற்ற ஓட்டுகள், தேசிய கட்சியாக நீடிப்பதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை. ஆகவே, ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. அக்கட்சி, பீகார், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக செயல்படும். அதன் `லாந்தர் விளக்கு' சின்னம் நீடிக்கும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுபோல், சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதாதளம், அருணாசல காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய கட்சிக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு, அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றில் பிரசாரம் செய்தல், வாக்காளர் பட்டியலை இலவசமாக பெறுதல் போன்ற சலுகைகளை, அங்கீகாரம் ரத்தான கட்சிகள் இழக்கின்றன. ![]() மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்: நரேஷ் குப்தா மனநிறைவுடன் ஓய்வு பெறுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நரேஷ் குப்தா. 1973-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், தொடர்ந்து 37 ஆண்டுகள் அரசின் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியவர். அவர் சனிக்கிழமை (ஜூலை 31) ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது: உள்துறை, மாநில திட்ட கமிஷன், பொதுத் துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளேன். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறேன். பொறுப்பேற்றதும் அதிகமான பணிச்சுமை இருக்காது என நினைத்தேன். ஆனால், தமிழகத்தில் சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றது. இதனிடையே, இடைத் தேர்தல்களும் அதிகமாக நடந்தன. சவாலான தேர்தல் பணியாக நாடாளுமன்றத் தேர்தல் இருந்தது. சட்ட மேலவை அமைக்கும் பணிகள் இப்போது அதிகமாக உள்ளன. தேர்தலில் பணபலம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். இதைக் கட்டுப்படுத்துவது சிரமமான விஷயம். இதுகுறித்து, புதிதாக வரும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அரசியலில் ஆர்வம் இல்லை: பணியில் இருந்து விடை பெற்றதும் சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. புத்தகம் எழுதுவது பற்றி பிறகு யோசிப்பேன். அரசியலில் ஈடுபட எனக்கு ஆர்வமில்லை. முதல்வரைச் சந்திக்கும் அளவுக்கு நான் பெரிய மனிதர் இல்லை என்றார் நரேஷ் குப்தா. 2010, ஜூலை மாதம் முப்பதாம் நாள் அண்மை செய்திகள் ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan,044-64541144 +91-7299140319 +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly NewsPaper send your comments and corrections |